search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்புனா என்னானு தெரியுமா விமர்சனம்"

    சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின் - ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `நட்புனா என்னானு தெரியுமா' படத்தின் விமர்சனம்.
    கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இந்த நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஏற்படும் ஒரு சம்பவத்திற்கு பிறகு பெண்களை நம்ப கூடாது. இனி நமது வாழ்வில் பெண்களே கிடையாது என்று முடிவு செய்கிறார்கள்.

    வேலை இல்லாமல் ஊர் சுற்றி வரும் இவர்கள், சுயமாக ஒரு தொழில் தொடங்க முடிவு செய்கிறார்கள். கல்யாணத்திற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து கொடுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பணியை தொடங்குகிறார்கள்.



    இந்த நிலையில், ரம்யா நம்பீசனை பார்க்கும் ராஜூவுக்கு காதல் வந்து விட, அடிக்கடி ரம்யாவை பார்க்க செல்கிறார். இது மற்ற இருவருக்கும் சந்தேகத்தை உண்டுபண்ண, ராஜூ தனது நண்பர்களை கூட்டிச் சென்று ரம்யா நம்பீசனை காட்டுகிறார். ரம்யாவை பார்க்கும் இருவருக்குமே பிடித்துப் போகிறது.

    இந்த நிலையில், அருண்ராஜா காமராஜ் கவினை உசுப்பேற்றிவிட கவின் ரம்யாவை காதலிப்பதாக கூறுகிறார். ரம்யாவும், எந்தவித எதிர்ப்பும் இன்றி கவினின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இதனால் இவர்களது நட்பில் விரிசல் ஏற்படுகிறது.

    கடைசியில், நண்பர்கள் இணைந்தார்களா? கவின் - ரம்யா நம்பீசன் காதல் சேர்ந்ததா? அதன் பின்னணியில் நடக்கும் பின்னணியே நட்பான மீதிக்கதை.



    இந்த படத்தின் மூலம் கவின் தன்னை ஒரு நாயகனாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். நண்பர்களுடனான காட்சியிலும் சரி, காதலியுடனான காட்சியிலும் சரி சிறப்பாக நடித்திருக்கிறார். முன்று நண்பர்களின் நட்புக்கு இடைஞ்சலாக வரும் கதாபாத்திரத்தில் ரம்யா நம்பீசன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    இயக்குநராக வெற்றி வாகை சூடியிருக்கும் அருண்ராஜா காமராஜூக்கு இந்த படம் நடிப்பில் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்கும் எனலாம். இனி முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அனைத்தையும் விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் ராஜூ தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார்.



    மற்றபடி இளவரசு, மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், ரமா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

    தனது முதல் படத்திலேயே நட்பு, காதலை மையப்படுத்திய கதையை இயக்கி இளைஞர்களை கவர்ந்திருக்கிறார் இயக்குநர் சிவா அரவிந்த். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் மனதில் பதியும் வரை மெதுவாக போகும் கதை, கதாபாத்திரங்கள் பற்றிய புரிதல் ஏற்படும் போது புத்துணர்ச்சியை கொடுக்கிறது. காதலும், நட்புப் போட்டி போட்டுக் கொண்டு விளையாடும் இந்த கதையில், காமெடிக் காட்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. நண்பர்கள் முன்று பேருமே அவர்களது கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் வசனங்கள் படத்திற்கு முக்கிய பலம்.

    சி.தரண்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இடத்திற்கு தகுந்தாற்போல் வந்து ரசிக்க வைக்கிறது. கே.யுவராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

    மொத்தத்தில் `நட்புனா என்னானு தெரியுமா' கலாட்டா.

    ×